நம்மில் பலரும் பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்பெறும் கருத்தரங்களில் கலந்து கொண்டிருப்போம். பொதுவாக அக்கருத்தரங்கங்களில், அவைகளை நடத்தும் அமைப்பாளர்களால் அமர்வுகள் முன்தீர்மானிக்கப்பட்டு அதற்கான நிபுணர்கள் பேச அழைக்கப்படுவார்கள். மொத்த நிகழ்வுமே அந்நிறுவன ஊழியர்கள் / தன்னார்வலரைக் கொண்டு ஒருங்கிணைக்கப்படும். இவற்றில் பங்கேற்க வருபவர்கள் அமைப்பாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். ஆனால் திறவெளிக் கருத்தரங்கம் என்பது இவ்வகையான கருத்தரங்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

இதில் அமைப்பாளர்களின் பணி என்பது பேசுபொருள் (theme) குறித்த ஒரு அடிப்படைக் குறிப்பை அளிப்பதுடன் பெரும்பாலும் முடிந்துவிடுகிறது. இந்த பேசுபொருளை நிகழ்வு நடக்கும் நாட்களில் மேற்கொண்டு விரிவாக்கி பெரிதும் முன்னெடுப்பவர்கள் பங்கேற்பாளர்களேயாவர். இவ்வகையில் திறவெளிக் கருத்தரங்கம் என்பது அமைப்பாளர் என்ற நிறுவனமயமற்ற முறையில் எல்லா பங்கேற்பாளர்களாலும் இணைந்து உருவாக்கப்படும் ஜனநாயகபூர்வமான நிகழ்வாகும். ஒவ்வொரு பங்கேற்பாளரும் கீழ்க்கண்டவற்றில் ஏதாவதொரு வகையில் தங்கள் பங்கை ஆற்றலாம்.

1. குறிப்பிட்ட தலைப்புகளில் அமர்வுகளை முன்னின்று நடத்தலாம்.
2. கருத்தரங்கத்தை நடத்தத் தேவையான பிற உதவிகளைச் செய்யலாம்.
3. இவையிரண்டையும் செய்ய இயலாதவர்கள் கருத்தரங்கத்தை காணொளியாகவோ, புகைப்படமாகவோ பதிவுசெய்யலாம். அல்லது அமர்வுகள் குறித்த தங்கள் கருத்தை அச்சு, இணைய ஊடகங்களில் பதிவு செய்யலாம்.

சுருங்கக் கூறின், இதில் பங்குகொள்ளும் ஒவ்வொருவரும் தன்னை நுகர்வோனாக அல்லாமல் இணைப் படைப்பாளியாக உணரலாம். இது நாம் கனவுகாணும் சமத்துவமும், வெளிப்படைத் தன்மையும், உண்மையான ஜனநாயகமும், மகிழ்ச்சியும் கூடிய ஒரு புத்துலகைப் படைப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகும். ஏனெனில், இங்கு அர்த்தபூர்வமான உரையாடல்களும், மெய்யான சந்திப்புகளும், பகிர்வு மனப்பான்மையும், பல்வேறு தரப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் மனவிரிவும் கிடைக்கிறது. இந்நிகழ்வில் நாம் பிற தொடர்புசாதனங்களான ஒலிபெருக்கி, மைக் போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. எனவே உரத்த குரல்களைவிட உரத்த சிந்தனையே முக்கியத்துவம் பெறும். அதிக கலந்துரையாடல்களும், குறைந்த பேருரைகளும் இடம்பெறும். பங்கேற்பாளர் கட்டணம் கிடையாது. அதற்குப் பதில் பங்கேற்பாளர் தன்னிச்சையாக சுயவிருப்புடன் அளிக்கும்  நன்கொடைகள் ஏற்றுகொள்ளப்படும்.